ட்றைடென் பாலசிங்கத்தின் ‘Not all answers are found in Google’ திரைப்படம் தாதாசாஹிப் பால்கே திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியிருக்கிறது

கனடியத் தமிழர்களால் தயாரிக்கப்பட்டு உலகெங்கும் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுவரும் சீன மொழிப் படமான ‘Not all answers are found in Google’ தற்போது இந்தியாவின் பிரபல தாதாசாஹிப் பால்கே திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியிருக்கிறது.



கனடியத் தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட இளம் இயக்குனரான ட்றைடென் வீ.பாலசிங்கத்தின் இயக்கத்தில், ஆனந்த் தர்மலிங்கம் தயாரித்து வெளிவந்த இத் திரைப்படம் சமீபத்தில் சீன தலைநகர் பெய்ஜிங் திரைப்ப்டவிழாவில் திரையிடப்பட்டிருந்ததுடன் சீன அரசின் அங்கீகாரத்தையும் அது பெற்றிருந்தது. கூகிளுக்கு (தொழில்நுட்பம்) அப்பாலும் மகிழ்ச்சியான மனிதவாழ்வுக்கான விடைகள் இருக்கின்றன என்ற போதனையை பேரன் – பேத்தி என்ற இருபாத்திரங்களிடையேயான எளிய உரையாடல் / உணர்வாடல்கள் மூலம் சிததரித்துக் காட்டும் இப்படம் உலகத் திரைகளை அலங்கரிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.


இது பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் பாலசிங்கம், “இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் டாடாசாகேப் பால்கே பெயரால் நடாத்தப்படும் சர்வதேச விருது விழாவிற்கு எமது படைப்பு உத்தியோக பூர்வமாக தேர்வு செய்யபட்டுள்ளது! இந்தியாவின் அதி உன்னத விருது விழாவுக்கு எமது படைப்பு தெரிவானதே மிகப்பெரும் கெளரவம். வரப்போகும் வெற்றி தோல்விகள் இரண்டாம் பட்சமே” எனத் தன்னடக்கத்தோடு கூறுகிறார்.

தாதாசாஹிப் பால்கே விருது

தாதாசாஹிப் பால்கே விருது

இந்தியாவில், திரைத்துறையில் வழங்கப்படும் அதியுயர் விருதாகக் கருதப்படும் தாதாசாஹிப் விருது வருடாந்த தேசிய திரை விருதுவிழானின்போது வழங்கப்படுகிறது. இந்திய அரசின் தகவல், ஒளிபரப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட திரைப்படவிழாப் பணிப்பகத்தினால் இவ் விழா நடத்தப்படுகிறது. இந்திய சினிமாத் துறையின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் அதிசிறந்த முறையில் பங்களித்தவர் என, இந்திய திரையுலகில் புகழ்பெற்ற ஆளுமைகளினால் தெரிவுசெய்யப்படும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதில் தெரிவாகுபவருக்கு தங்கப் பதக்கம், சால்வை, 1 மில்லியன் இந்திய ரூபாய்கள் பரிசாக வழங்கப்படுகிறது. இதன் 67 ஆவது தேசிய விருது விழாவில் ரஜினிகாந் இவ்விருதைப் பெற்றிருந்தார்.

1969 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கான தேர்வுகளும், இந்திய சினிமாவின் இதர துறைகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன.